ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தப்பாடி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கரோனா சிறப்பு நிதி கடன் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடனுதவிகளை வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் கே.சி. கருப்பணன், "கரோனா பெருந்தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி வருவதைப் போல, மக்கள் அனைவரும் வீட்டிலிருங்கள், தனித்திருங்கள்.
அனைவரும் இதற்கு ஒத்துழைத்து, பின்பற்றி கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க முன்வர வேண்டும். முதலமைச்சரின் ஆணைப்படி நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்பட்டு, அனைத்து நீர் நிலைகளிலும் பாதுகாக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர்களை சுத்தப்படுத்தி, பாதாள கழிவு நீர் திட்டத்தின் மூலம் நீர்நிலைகளில் கலக்காதவாறு இருக்க தனித்த வழிமுறைகள் காணப்பட்டுள்ளன.
கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையால் இத்திட்டம் தள்ளிப்போய் கொண்டிருந்தாலும், விரைவில் முதலமைச்சர் இத்திட்டத்தை அறிவிப்பார். குடிமராமத்து பணிகள் மூலம் பாசன வாய்க்கால்கள் கான்கிரீட் தளங்களாக மாற்றப்பட்டு, காவிரி கடைமடை பகுதி வரை தடையின்றி தண்ணீர் கொண்டுச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.