கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் வடவள்ளி பகுதியில் மழலையர் பள்ளி நடத்தி வந்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு கவுன்சிலிங் செய்வதற்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.
இதில் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த டீனா என்பவர் தேர்வாகி பணிபுரிந்து வந்துள்ளார். டீனா மூலமாக அவரது கணவர் ஜோஆண்டனி மற்றும் அவரது தாயார் ஸ்டெல்லா உமாராணி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தங்களுக்கு மத்திய மாநில அரசுத் துறைகளில் தெரிந்தவர்கள் பலர் உள்ளதாகவும், அரசுப் பணி வேண்டுமென்றால் தாங்கள் செய்துதர தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இதனை நம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என எட்டு பேர் 65 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கும் போது 45இல் இருந்து 60 நாட்களுக்குள் வேலை வாங்கி தருவதாகவும், இல்லையெனில் பணத்தைத் திருப்பி கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
பணத்தைத் திருப்பிக் கேட்டால் மிரட்டல் விடுத்ததாகவும், இதேபோல் பலரிடம் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என அசோக்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து மாநகர குற்றபிரிவு காவல்துறை ஜோஆண்டனி, டீனா, மற்றும் தாயார் ஸ்டெல்லா உமாராணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.44.4 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்