தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 வயது குழந்தை 1.35 லட்சம் ரூபாய்க்கு விற்பனை: நான்கு பேர் கைது! - nagapattinam child trafficking 4 held

நாகப்பட்டினம்: மூன்று வயது குழந்தை ஒரு லட்சத்து 35ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தந்தை, இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

nagapattinam
nagapattinam

By

Published : May 29, 2020, 12:13 PM IST

Updated : May 29, 2020, 2:38 PM IST

நாகை அடுத்த நாகூர் கோசா மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி. மீன் வியாபாரம் செய்துவரும் இவருக்கும் இவரது மனைவி நிர்மலா பேகத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்தத் தம்பதியினருக்கு மும்தாஜ் பேகம் என்ற மூன்றரை வயது பெண் குழந்தையும், ராஜா உசேன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளன.

இந்நிலையில், தனது பெண் குழந்தையை மதராஸில் (இஸ்லாமியப் பள்ளி) சேர்த்து விடும்படி நாகூரைச் சேர்ந்த நண்பர் அசன் முகமதுவிடம் அஷ்ரப் அலி உதவி கேட்டுள்ளார்.

அதன்படி பெண் குழந்தையை மதுரையில் உள்ள இஸ்லாமிய மதராஸாவில் அசன் முகமது சேர்க்காமல், கோவில்பட்டியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு அக்குழந்தையை ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதையடுத்து, தனது பெண் குழந்தையை மதுரை மதராஸில் பார்க்கச் சென்ற அஷ்ரப் அலி அங்கு குழந்தை இல்லாததால் அது குறித்து அவரது நண்பர் அசன் முகமதுவிடம் கேட்டுள்ளார். அசன் முகமது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளிக்கவே இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், கோவில்பட்டியிலிருந்த குழந்தை மீட்கப்பட்டு தூத்துக்குடி குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது குறித்து நாகை காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் நாகூர் காவல் துறையினர் தெத்தி பகுதியைச் சேர்ந்த அசன் முகமதுவிடம் விசாரணை நடத்தினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அஷ்ரப் அலி இதற்கு முன்னதாக தனக்குப் பிறந்த மூன்றாவது குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர், அதற்கு உண்டான பத்திரம், ஆவணங்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அம்சேந்திரன் கொடுத்த புகாரை அடுத்து குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த தந்தை அஷ்ரப் அலி, மதராஸில் குழந்தை படிக்கிறாள் என நாடகமாடிய நண்பர் அசன் முகமது, நாகை கடசல்கார தெருவைச் சேர்ந்த கமர் நிஷா (53), சிக்கல் மெயின் ரோட்டைச் சேர்ந்த பாத்திமா (45) என நால்வரைக் கைதுசெய்தனர்.

தொடர்ந்து, அப்துல் ரசாக், குழந்தையை வாங்கிய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ரெஜிபு நிஷா ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

பெற்ற மகளை தந்தையே விற்பனைசெய்த சம்பவமும், நாடகமாடிய கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ள நிகழ்வும் நாகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு வழக்கு: கரோனாவால் குற்றவாளியின் தண்டனை ஒத்திவைப்பு!

Last Updated : May 29, 2020, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details