வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது, அதற்காக எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து தலைமைச் செயலர் சண்முகம் அனைத்து துறை உயர் அலுவலர்களுடன் நேற்று (செப்.18) ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்துத்துறை அரசு செயலர்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள், விமானப்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் மழை பொழிவைத் தரக்கூடிய வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல், பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளில் ஈடுபடும்போது பல்வேறு துறை அலுவலர்களின் செயல் திறன்களை மேம்படுத்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.
இந்த கூட்டத்தில், பேரிடர் காலங்களில் நடத்தப்படும் மாதிரி பயிற்சிகள் தகுந்த தனிநபர் இடைவெளியை பயன்படுத்தி 50 பேருக்கு மிகாமல் பயிற்சி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அனைவரும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கூட்டம் கூடுதலை தவிர்க்க வேண்டும், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடுகள், குறும்படங்கள் என பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
37 மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் மற்றும் சென்னையில் 15 மண்டலங்களில் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கை, ஆயத்தப் பணிகளை கண்காணித்து அறிக்கை வெளியிட வேண்டும்.
பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பினை துரிதப்படுத்த முன்னெச்சரிக்கை கருவிகள், பேரிடர் குறித்த அறிவிப்பு கருவி மற்றும் TN- smart என்ற செயலி ஆகியவை அவசர மீட்பு பணிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் அனைத்துத்துறை தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தலைமைச் செயலர் சண்முகம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.