சென்னை மாவட்டம், அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 20 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய வளாக கட்டடம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் சார்பில் கோயம்புத்தூர் வடக்கு வட்டம், துடியலூர் கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் அலுவலகம், அதன் 5 சார்நிலை அலுவலகங்கள் செயல்படும் வகையில் 14,096 சதுரடி கட்டட பரப்பளவில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் மற்றும் சார்நிலை அலுவலகக் கட்டடம்.
காஞ்சிபுரம் ஓரிக்கை கிராமத்தில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டமுறை எடையளவு ஆய்வகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகக் கட்டடம். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 2 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சேலம் - மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகம் மற்றும் திருநெல்வேலி - அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் ஆகிய இடங்களில் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகக் கட்டடங்கள்.
திருப்பத்தூரில் 49 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் என மொத்தம் 29 கோடியே 94 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை அண்ணா நகரில் தொழிலாளர் ஆணையரகம் மற்றும் அதன் சார்நிலை அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கிடும் வகையில் 17 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள தொழிலாளர் ஆணையரக வளாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.