சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 21 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வில் நேற்று (ஆக. 13) இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பெரும்பான்மை குறைவாக இருந்ததால்தான் திமுகவை சேர்ந்த 21 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறுவது தவறு எனவும், ஆரம்பம் முதல் இதுநாள் வரை ஆளும் அரசு எந்த தருணத்திலும் பெரும்பான்மையை இழக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் 124 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளதாகவும், பேரவையில் தொடர்ந்து பெரும்பான்மையோடு செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அவையின் மாண்பை அவமதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்ததற்காகவே 21 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சபாநாயகர் உரிமைக்குழு விசாரணைக்கு பரிந்துரைத்தார் என்றார்.