சென்னை: பணி நீக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களை பாரதிய மஸ்தூர் சங்கத்தில் சேர்த்தால் உடனடியாக பணி தருவதாக மாநகராட்சி சென்கொடி சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
செப்டம்பர் 7 ஆம் தேதி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு, செங்கொடி சங்கத்தின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சார்பில் செங்கொடி சங்கப் பிரதிநிதிகள் நால்வரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாநகராட்சி நிர்வாகம் கூலியை உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்தது.
ஆனால், அதற்கு மாறாக அடுத்த நாள் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிய சென்னை மாநகராட்சி நிர்வாகம் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒப்பந்த பணியாளர்கள் 300 பேரையும், பேச்சுவார்த்தைக்கு வந்த நிரந்தரப் பணியாளர்கள் நால்வரையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டது.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து செங்கொடி சங்கத்தினர் உண்ணாநிலை, முற்றுகை என பல கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஊழியர்களின் தொடர் போராட்டத்தை அடுத்த செப்டம்பர் 23ஆம் தேதி மாலை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்திய மாநகராட்சி தரப்பு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தது.
ஆனால், பணியில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 300 நபர்களில் வெறும் 90 நபர்களை மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் பணியில் இணைத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த செங்கொடி சங்கத்தினரிடம் கூறியபோது,"பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்க நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.