தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

135 ஆண்டுகாலம் பழமையான சட்ட பிரிவுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு! - உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி

சென்னை : விவசாய நிலங்களில் உரிமையாளர்களின் அனுமதி பெறாமல் மின் கம்பங்களை நட அதிகாரம் அளிக்கும் சட்ட பிரிவுகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் மின் கம்பங்களை நட அனுமதி அளிக்கும் சட்ட பிரிவுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு!
விவசாய நிலங்களில் மின் கம்பங்களை நட அனுமதி அளிக்கும் சட்ட பிரிவுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு!

By

Published : Oct 19, 2020, 7:46 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் நெலாலி கிராமத்திலிருந்து ராசிப்பாளையம் வரை உயர் மின் அழுத்த மின் இணைப்பு தரும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்தது.

இந்த திட்டத்திற்காக, நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்காமல், விவசாய நிலங்களில் மின் கம்பங்களை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் பொம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜெயந்தி உள்பட 11 விவசாயிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், "கடந்த 1885ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட "டெலகிராப்" சட்டத்தின்கீழ் நில உரிமையாளர்களை கேட்காமல் நிலத்தை அரசின் பயன்பாட்டுக்கு எடுத்துள்ளதாகவும், அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த 135 ஆண்டு பழமையான இந்திய "டெலகிராப்" சட்டப் பிரிவுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

மேலும், பெட்ரோலியம் குழாய் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும்போது சம்மந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள், அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படுவது போல உயர் அழுத்த மின் வழித்தடம் அமைக்கும் போது பின்பற்றப்பட வேண்டுமென உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவானது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அந்த காலத்தில் தொலைத் தொடர்பிற்கான சாதனமாக இருந்த டெலகிராப் இணைப்புக்கான கம்பங்களை நடும்போது பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்படுவதில்லை. ஆனால், மின் வழித்தடத்தால் கதிர்வீச்சு அபாயம் உள்ளது. அது விவசாயத்தை பாதிக்கச் செய்வதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர்களின் கருத்துக்களை கேட்டறிந்த நீதிமன்றம், "இதேபோல உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. எனவே, விவசாய நிலங்களில் மின் கம்பங்கள் நடுதலை எதிர்த்து தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைந்து விசாரிக்கப்படும்" என்று தெரிவித்து, விசாரணையை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது.

ABOUT THE AUTHOR

...view details