தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியர் தேர்வு விவகாரம் : வெளியிட்ட முடிவுகளை உடனடியாக திரும்பப்பெற கோரி மனு! - universities arrear pass order

சென்னை : அரியர் தேர்வு குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படாத நிலையில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ள பல்கலைக்கழகங்களை உடனடியாக அவற்றை திரும்பப் பெற உத்தரவிட வேண்டுமென கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரியர் தேர்வு விவகாரம் : வெளியிட்ட முடிவுகளை உடனடியாக திரும்பப்பெற கோரி மனு!
அரியர் தேர்வு விவகாரம் : வெளியிட்ட முடிவுகளை உடனடியாக திரும்பப்பெற கோரி மனு!

By

Published : Nov 5, 2020, 8:34 PM IST

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளின் இறுதிப்பருவதேர்வைத் தவிர, மற்ற பருவ தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதேபோல அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், "அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது" என தெரிவித்திருந்தது.

பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், "இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது. அரியர் தேர்வுகள் ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடுபில்லை" என கூறியிருந்தது.

இறுதி பருவத் தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ராம்குமார் ஆதித்தன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், "தமிழ் நாட்டில் சென்னை பல்கலைக்கழகம்,மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்று விட்டதாக அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அரியர்ஸ் தேர்வு நடத்தாமல் அரியர்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே வெளியிட்டிருந்தால் அதனை உடனடியாக திரும்ப பெற்று, புதிய அறிவிப்பாணை வெளியிட்டு அரியர் தேர்வை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details