தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள இடைச்சிவிளை கிராமத்தில் நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க கனிமொழி எம்.பி. திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், அந்தக் கூட்டம் அரசால் ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து தடையை மீறி திமுக சார்பில் அந்தக் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட கனிமொழி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றிவிடக் கூடாது என்பதற்காகவே இன்று கிராம சபைக் கூட்டங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு ரத்துசெய்துள்ளது.
எனினும், திமுக சார்பில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் அனைத்திலும் வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அம்மாநில அரசே பாதுகாப்பு கொடுக்கிறது. நாடு முழுவதுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது" என்றார்.
இந்நிகழ்வில் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.