இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கோவை இருகூரிலிருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை எண்ணெய்க்குழாய் பதிக்கும் திட்டத்தைச் (IDPL) செயல்படுத்திவருகின்றது. இதனால், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் வேளாண் விளை நிலம் கடுமையாகப் பாதிக்கப்படும். பல்லாயிரக்கணக்கான வேளாண் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும்.
எனவே, இது குறித்து விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரில் முறையிட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தொழில் துறை அமைச்சரைச் சந்தித்து, விவசாயிகள் விரிவாகப் பேசினர். ‘இது மத்திய அரசு திட்டம்; நாங்கள் எதுவும் செய்ய இயலாது’ எனத் தொழில்துறை அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.
அதன்பிறகு, பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பொறுப்பாளர்கள் தில்லிக்கு வந்தனர். அவர்களை, பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் நான் அழைத்துச் சென்றேன். அவரிடம் முறையிட்டனர். அதன்பிறகு, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். அனைத்து இந்திய விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்தனர்.