ஈரோடு: தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் மலையாள இன பழங்குடியினருக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்கப்படுவதால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுகின்றனர். ஆனால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர், அந்தியூர் மலைப்பகுதியில் வாழும் மலையாளி இன மக்களுக்கு இதர வகுப்பினர் என வருவாய்த்துறை சான்றிதழ் வழங்குகின்றனர்.
சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டத்தில் மலையாளி மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்குவதைப் போல, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்கக்கோரி பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அரசு கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக ஆரம்பக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பள்ளிக்குச் செல்லாமல் பெற்றோருடன் ஒரு வாரமாக பள்ளி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சான்றிதழ் கிடைக்கும் வரை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை எனப் பெற்றோர் கூறியதால் கரளையம், பசுவனாபுரம், எக்கத்தூர், பவளக்குட்டை, கடம்பூர், கல் கடம்பூர், அத்தியூர், மல்லியம்துர்க்கம், குரும்பூர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியைப் புறக்கணித்து திங்கள்கிழமை கடம்பூரில் அரசின் கவன ஈர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சாலை மறியல் போராட்டம் காரணமாக அரசுப் பேருந்துகள் சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள், பல கி.மீ. தூரம் நடந்து சென்றன. மேலும் பழங்குடியினர் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் கும்பி ஆட்டமும் அனைவரையும் கவர்ந்தது.
இதையும் படிங்க:மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு கேடு: திருவாரூரில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!