கடந்த சில நாள்களுக்கு முன்பு முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத புதிய உச்சமான 5 ரூபாய் 25 காசுக்கு உயர்ந்தது.
இந்நிலையில் தற்பொழுது கறிக்கோழி விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கடந்த 6ஆம் தேதி 94 ரூபாய்க்கு விற்கப்பட்ட உயிருடனான ஒரு கிலோ கறிக்கோழி இன்று 12 ரூபாய் உயர்ந்து உயிருடன் 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முட்டை விலை அதிகரித்த நிலையில் கறிக்கோழியின் விலை உயர்வு குறித்து நாமக்கல் கறிக்கோழி உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, "புரட்டாசி மாதமாக இருந்தாலும்கூட தமிழ்நாடு, கேரளாவில் கறிக்கோழி விற்பனை தொடர்ந்து அதிகரித்துவருவதால் விலை உயர்ந்துள்ளது.
புரட்டாசி மாதத்தை ஒட்டி உற்பத்தி சற்று குறைக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்ததைவிட விற்பனை அதிகமாகி வருவதால் தேவையை அதிகரித்துள்ளது. அதனால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்விலை இன்னும் வரும் நாள்களில் மேலும் உயரலாம்" எனத் தெரிவித்தனர்.
சில்லறை விற்பனையில் கறிக்கோழி ஒரு கிலோ 160 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது கவனிக்கத்தக்கது.