தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கிரீமிலேயர்’ வரம்பை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்க்க வேண்டும் - ராமதாஸ்

சென்னை : ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கிரீமிலேயர் வரம்பை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்க்க வேண்டும் - மரு.ராமதாஸ்
கிரீமிலேயர் வரம்பை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்க்க வேண்டும் - மரு.ராமதாஸ்

By

Published : Jul 4, 2020, 2:50 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய அளவில் ஓபிசி வகுப்பினருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, ஆண்டு வருவாய் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. அதற்கும் கூடுதலான வருவாய் ஈட்டும் குடும்பங்கள் கிரீமிலேயர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.

‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று 1998ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு குறிப்புரை ஒன்றை அனுப்பியது. அதன்மூலம் மத்திய அரசின் திட்டம் முறியடிக்கப்படும் என்று ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும் நம்பியிருந்த நிலையில், தனது நிலையிலிருந்து திடீரென பின்வாங்கியிருக்கிறது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

அண்மையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டத்தில், கிரீமிலேயரைக் கணக்கிட சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கான எதிர்ப்பை திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பவும் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதன் எதிர்ப்பை திரும்பப் பெற்றால், கிரீமிலேயரை தீர்மானிக்க, பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானங்களுடன், சம்பளமும் கணக்கில் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் முடிவு அரசாணையாக வெளியிடப்பட்டுவிடும்.

அவ்வாறு வெளியிடப்பட்டால் மாத வருமானம் ரூ. 67 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ள குடும்பங்கள் கிரீமிலேயராக கருதப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும். ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் கடைநிலை அரசுப் பணியில் இருந்தால் கூட, அவர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. ஒருவேளை கிரீமிலேயர் வரம்பு ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டால் கூட எந்த பயனும் இருக்காது. இப்படி செய்வதை விட, ஓபிசி வகுப்பினருக்கு மிக மோசமான சமூக அநீதியை இழைக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை காப்பது தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணியாகும்.

இதை உணர்ந்து ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதன் மூலம் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details