சென்னை நியூ ஆவடி சாலையில் கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக ரவுடி சங்கரை ஆகஸ்டு 21ஆம் தேதி விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் தங்களைத் தாக்க முயன்றதாக கூறி ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சங்கர் கொலை செய்யப்பட்டார். பின்னர், காவலர்கள் ரவுடி சங்கரை தாக்கி கொலை செய்துவிட்டு, என்கவுன்ட்டர் நாடகம் ஆடுவதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவுடி சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து என்கவுன்ட்டர் விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டு தமிழ்நாடு அரசே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என தெரிவித்தது. இதனையடுத்து, கடந்த 1ஆம் தேதி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
அதேபோல, ரவுடி சங்கரின் உடற்கூறாய்வு சோதனை குறித்த எழும்பூர் மாஜிஸ்திரேட் அறிக்கையும், சிபிசிஐடி விசாரணையின் இடைக்கால அறிக்கையும் முன்னதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று(செப்டம்பர் 25) இந்த வழக்கானது நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குறிஞர் சங்கரசுப்பு, "உடற்கூராய்வு சோதனை அறிக்கையை பார்க்கும்போது, தற்காப்புக்காக சுட்டதாக தெரியவில்லை. திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகவே தெரிகிறது. அதனால் ஆய்வாளர் நடராஜன் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உடற்கூறாய்வின் போது சங்கரின் குடும்பத்தாரையோ, அவர் குடும்பத்தார் சார்ந்த மருத்துவ பிரதிநிதியையோ பங்கேற்க உரிய நோட்டீஸ் வழங்கப்படவில்லை. என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நபரின் உடற்கூறாய்வை மீண்டும் ஒருமுறை இரண்டு மருத்துவர்கள் தலைமையில் நடத்தப்பட வேண்டும்.
சங்கரின் உடலில் இருந்த 12 காயங்கள் காவலர்களின் லத்தி அடியாலேயே ஏற்பட்டுள்ளது. ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார்" தெரிவித்தார்.
காவல்துறை சார்பில் ஆஜரான அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், "ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட், இறந்தவரின் தாயார் கோவிந்தம்மாள் மற்றும் அவரது சகோதரி ரேணுகா ஆகியோரிடம் புலன் விசாரணை செய்தனர். அத்துடன், உடற்கூறாய்வு சோதனை செய்வதற்கு ஒப்புதல் வாங்கி, அடுத்த நாள் (ஆகஸ்ட் 22) சோதனை செய்ய ஏற்பாடு செய்தனர்.