நாகையிலிருந்து புதிதாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா இளைய மதுக்கூடத்தில் மணல்குவாரி ஒன்று இயங்கிவந்தது. அந்த மணல்குவாரியை ஜெயபால் என்பவர் நடத்திவந்தார்.
நாங்கூர் பகுதியில் எடுத்த உரிமத்தை வைத்து அங்கு அவர் மணல் எடுத்துவந்ததாக அறிய முடிகிறது.
இதனையடுத்து, இளைய மதுக்கூடத்தின் ஊராட்சிமன்றத் தலைவரும் பாஜகவின் மாநில ஓபிசி துணைத்தலைவருமான அகோரம் குழுவினருக்கும், ஜெயபால் குழுவினருக்கும் இதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் மோதல் ஏற்பட்டது.
அதில் பாஜக பிரமுகர் அகோரம் தரப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனை ஜெயபாலின் மைத்துனர் முடிகண்டநல்லூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தாக்கினார்.
தாக்குதலுக்குள்ளான கோபாலகிருஷ்ணன் இதுகுறித்து திருவெண்காடு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 6ஆம் தேதி அன்று அகோரம் மற்றும் பலர் சேர்ந்துக் கொண்டு மயிலாடுதுறை மணல்மேடு அருகே உள்ள முடிகண்டநல்லூர் சென்று முருகானந்தத்தின் வீட்டிற்குள் புகுந்து, அவரை பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறிக்கொண்டு தாக்கியுள்ளனர்.
இதனிடையே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வரவே அனைவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து முருகானந்தம் மணல்மேடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அகோரம், கார்ஓட்டுனர் எம்பாவையை சேர்ந்த பாபு மற்றும் பலர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்தனர்
வழக்கின் அடிப்படையில், திருமேனிக்கூடம் மணிமாறன், ஆலங்காடு கார்த்தி, சித்தன்காத்திருப்பு அஜீத்குமார், சம்பாக்கட்டளை வெங்கடேசன், இளையமதுக்குடம் முத்துக்குமரன், ஆலங்காடு சபரிவேலன், சம்பாகட்டளை வாஞ்சிநாதன் ஆகிய 7 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமறைவாகி உள்ள பாஜக பிரமுகர் அகோரம் உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.