இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது 13 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 465 பொறியியல் கல்லூரிகள் இணைப்புக் கல்லூரிகளாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தற்போது உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என மாற்றப்படும் என்றும், புதிதாக தோற்றுவிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்றும் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்ற கல்லூரிகளை கண்காணித்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளில் தொய்வினை தவிர்க்கவும் கற்றல் தரத்தை உயர்த்தும் வகையில் ஆராய்ச்சியில் கவனம் செலுத்திடவும் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்படுவது இது முதல் முறையல்ல, கடந்த 2007ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சி, மதுரை, நெல்லை கோவை என ஆறாக பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டு செயல்பட்டது.