பாட்டாளி மக்கள் கட்சியின் 32ஆவது ஆண்டு விழாவையொட்டி, அக்கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் இணையவழியில் நடைபெற்றது. இதல் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ராமதாஸ், "பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 31 ஆண்டுகள் முடிவடைந்து 32 ஆவது ஆண்டு தொடங்கி விட்டது. ஆனால், நாம் இன்னும் இலக்கை அடைய முடியவில்லை. இதற்குத் தற்போது, கரோனா வைரஸ் ஒரு தடையாக அமைந்துவிட்டது. கரோனா வைரஸ் முடிவடைந்தவுடன், நாம் அனைவரும் இலக்கை அடைய கூடுதலாக 10 மடங்கு அதிக வேகத்தில் பணியாற்றவேண்டும்.
சமூக நீதியில் நமக்கு இணையானவர்கள் எவரும் இல்லை என்பதால் தான், இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக இடப்பங்கீடு என்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். எங்களுக்கு யாரும் இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை. இட ஒதுக்கீடு விஷயத்தில் நமக்குத் தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு வரை பல்வேறு துரோகங்கள் நமக்கு இழைக்கப்பட்டு வருகின்றன.