தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு குறித்து உறுதியான இறுதி முடிவை அரசு எடுக்க வேண்டும் - சரத் குமார் - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

சேலம் : மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வேண்டுமா, வேண்டாமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு உறுதியான முடிவெடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு குறித்து உறுதியான இறுதி முடிவை அரசு எடுக்க வேண்டும் - சரத் குமார்
நீட் தேர்வு குறித்து உறுதியான இறுதி முடிவை அரசு எடுக்க வேண்டும் - சரத் குமார்

By

Published : Sep 14, 2020, 4:42 PM IST

அக்கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம் வந்திருந்த அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் நடந்துவருகின்றன.

போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் இன்னும் தயாராகவில்லை என்பதையே தற்கொலைச் சம்பவங்கள் காட்டுகின்றன.

மேலும், தமிழ்நாடு இந்திய அளவில் உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது. எனவே இந்தச் சூழ்நிலையில் நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதில் தமிழ் அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் நீடிக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். கட்சியினரின் மனநிலையை நன்கு தெரிந்த பிறகு தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பேன்.

தமிழ்நாடு அரசியலில் கட்சி தொடங்குவது அனைவருக்கும் உள்ள உரிமை. ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பேன். அரசியலில் நான்தான் சீனியர். அதனால் அவருடன் கூட்டணி என்பதெல்லாம் எப்படி சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்பது அவர்களின் கனவு. சமத்துவ மக்கள் கட்சி தென் மாவட்டங்களில் மட்டும்தான் உள்ளது என்ற விமர்சனம் வருத்தத்தை அளிக்கிறது. இன, மொழி, சாதிப் பாகுபாடுகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே எங்களது கொள்கை.

234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் எங்களது கட்சி 14 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. ஆனால் நோய் தொற்று எப்படி பாதிக்கிறது என்பதை இன்னும் கண்டறிய முடியாத சூழல் இருக்கிறது.

அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே நோய்த் தொற்றை முழுமையாக ஒழிக்க முடியும். எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சியின் வேலை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

எட்டு வழி சாலை திட்டம் போன்ற வளர்ச்சி திட்டங்களை எதிர்த்தால் நாட்டில் எப்படி வளர்ச்சி ஏற்படும்.

அதே நேரத்தில் நீட் தேர்வு, எட்டு வழி சாலை திட்டம் போன்றவற்றிற்கு வெளி நாடுகளில் இருப்பதைப் போல பொது வாக்கெடுப்பு முறை சட்டம் இந்தியாவிலும் இருந்தால் பொதுமக்களின் கருத்தை அறிந்து அரசு முடிவெடுக்க வழி ஏற்படும்" என்று தெரிவித்தார்.

இதன்போது சமத்துவ மக்கள் கட்சி சேலம் மண்டல செயலாளர் மைக்கேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details