இது குறித்து தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தலைவர் ரங்கநாதன், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு செய்திக்குறிப்பில்,
"தந்தை பெரியார் இந்தியாவில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் சட்டப்பாதுகாப்புடனும், சாத்திரப் பாதுகாப்புடனும் நிலைநிறுத்தப்படுகிறது என்று திண்ணமாக எண்ணியதன் விளைவாகவே, சாதியொழிப்பிற்குச் சட்டமாற்றங்களும், சாத்திர நம்பிக்கை உடைப்பும் தேவை என்று தீவிரக் களப்பணியாற்றினார். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு, சாதிப் படிநிலைகள் ஒழிப்பு கூறப்படவில்லை. சமூகமாற்றம், சமதர்மம் என்பது சாதிகளை ஒழித்தால் தான் நிகழும் என்றும் கருதிய பெரியார், அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26 ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார், அந்தச் சட்டப் பிரிவுகளுக்காக இந்திய அரசியல் சட்டத்தினை எரிக்கவும் செய்தார்.
தந்தை பெரியார் 1957ஆம் ஆண்டில் சட்ட எரிப்புப் போராட்டம் அறிவிக்கும்வரை, இந்தியாவில் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது குறித்துச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடவுள் இல்லை என்று தன் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டங்களும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று நடத்திய போராட்டங்களும் சாதியொழிப்புத் தளத்திலிருந்து நடத்தப்பட்டவை.
சாதியப் படிநிலைகள் காக்கப்படும் கருவறைகளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று ஒலித்தது பெரியாரின் குரல். இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறையில் நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலம்காலமாக இருந்து வருகிறது. கடந்த 28-2-2007ஆம் தேதியன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர்.
மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் 1000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில் 50க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.
ஆனால், கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை. இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோயில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் ரகசியமாகவே உள்ளது. பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100 விழுக்காடு தமிழ்நாட்டின் பெரிய கோயில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர்.