அஇஅதிமுகவின் செயற்குழு கூட்டம் வருகின்ற 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக அதிமுக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், செம்மலை, நத்தம் விஸ்வநாதன், ரவிபெர்ணாட், மூத்த அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதையடுத்து தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்பணிகளை அதிமுக ஏற்கனவே தொடங்கியுள்ளது.
நிர்வாக ரீதியாக மாவட்டங்கள் பிரிவு, புதிய நிர்வாகிகள் நியமனம், பல்வேறு பிரிவுகளுக்கு உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் அதிமுகவின் சார்பில் யார் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என தொடர்ந்து விவாதங்கள் எழுந்து நடைபெற்றுவருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்காக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அவருடைய ஆதரவாளர்கள் 'நிரந்தர முதலமைச்சர் எடப்பாடியார் வாழ்க' என்று முழக்கமிட்டனர்.
அதேபோல, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வந்தபோது, 'அம்மாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ் வாழ்க' என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.
இதனால் அதிமுகவுக்குள் ஏற்பட்ட பதவி அரசியல் பனிப்போர் வெளிப்படையாக ஊடங்களில் பேசும் பொருளாகின.
ஆனால், இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும்போதும், கூட்டம் முடிந்து செல்லும்போதும் இருதரப்பினரும் முழக்கமிடுவதை தவிர்த்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி ரீதியாக மாவட்டங்களைப் பிரிப்பது, வழிகாட்டும் குழு அமைப்பது, வரவிருக்கும் தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை முடிவுசெய்வது, சசிகலா விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
11 பேரைக் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்பதால் அது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.