பிரான்ஸ் நாட்டின் பிளேஸ் டி லா பாஸ்டில், இங்கிலாந்தின் டிரஃபால்கர் சதுக்கம், அமெரிக்காவின் யூனியன் ஸ்கொயர், கென்யாவின் தாரீர் சதுக்கம், தென் அமெரிக்காவின் மெக்ஸிகோ சிட்டியிலுள்ள பிளேஸ் டி லாஸ் டிரெஸ் கல்சுராஸ், கீவிலுள்ள சுதந்திரச் சதுக்கம் போல தமிழ்நாட்டு அரசியலில் கோலோச்சிய பல தலைவர்களை உருவாக்கி, மக்கள்மயமாக்கியது கோடம்பாக்கம் என்றால் மிகையல்ல.
பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கே., கருணாநிதி, எம்ஜிஆர், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா என அன்று தொடங்கி இன்று அரசியலில் மய்யம் கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் என அந்தக் கோடம்பாக்கம் தந்த அரசியல் ஆளுமைகளை நல்லவை அல்லவை எனப் பகுத்தாய்ந்து கொண்டாடியதை யாரும் மறுத்தலிக்க முடியாது.
இப்போது, அந்த வரிசையில் மக்கள் இயக்கம் கண்டுள்ள இளைய தளபதி நடிகர் விஜய் களமிறங்கலாம் எனக் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழன் திரைப்படத்தில் அரசியல் பேச தொடங்கிய அந்த மெர்சல் அரசனுக்குத் தமிழ்நாட்டு அரசியல் அரங்கிற்குள் நுழைவுக்கான அறிகுறியாக மதுரை மாநகரில் 2013ஆம் ஆண்டு அவரது ரசிகர்களால் ஒட்டப்பட்ட "தலைவா வா; தலைமையேற்க வா!" என்ற வாசகம் பார்க்கப்பட்டது.
இதனிடையே, பாடல் வெளியீட்டு விழா போன்ற நிகழ்வுகளில் இலைமறை காயாக அரசியல் பேச்சைக் கேட்க முடிந்த அவரது மேடைகளில் இப்போது நேரடியாகவே வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் பெருமளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட அவர், தனது ரசிகர் மன்றங்களை "மக்கள் இயக்கமாக" மாற்றியது அவரது ரசிகர்களுக்குள் தேர்தல் களம் காணும் கனவை விதைத்தது.
அரசியலில் குதிக்க அவர் அவசரப்படவில்லை என்றாலும் அவரைச் சுற்றி நிகழ்பவை அனைத்தும் அத்தகைய தோற்றத்தையே ஏற்படுத்துகிறது.
அரசியலில் இப்போதே அதிரடியாக களமிறங்க வேண்டுமென்ற மனநிலையிலிருந்து சில காலம் அமைதியாக இருக்குமாறு தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தாலும் அவரது ரசிகர்கள் கேட்டப்பாடில்லை.
அண்மையில், இது குறித்து ஊடகங்களிடையே பேசிய அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், "விஐய் மக்கள் இயக்கம் சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக மாற்றப்படும்" எனக் கூறியது முத்தாய்ப்பாக அமைந்தது.
அண்மையில் வெளியான “மெர்சல்”, “சர்க்கார்” போன்ற திரைப்படங்களில் மத்திய பாஜக அரசையும், மாநில அதிமுக அரசையும் போகிறப்போக்கில் விமர்சித்து, அரசியல் கட்சிகள் ஆற்றிய கடும் எதிர்வினையை எதிர்க்கொண்டதும் அவரது அரசியல் நுழைவு தீவிரமாக கவனிக்கவைத்தது.
அத்துடன், நீட் தேர்வின் காரணமாக உயிரிழந்த அனிதாவின் குடும்பத்தைச் சந்தித்தது, ஸ்டெலைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட ஸ்னோலின் அம்மாவை நேரில் சந்தித்தது என மக்களின் உள்ளக்கிடங்கை அறிந்து செயலாற்றியது என்பதெல்லாம் உணர்வுப்பூர்வமான தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
நடிகை குஷ்பூ பாஜகவில் இணைந்த சூழலில் நடிகர் விஜய்யும் பாஜகவில் இணைய வாய்ப்பிருப்பதாக யூகங்கள் அடிப்படையில் பேசப்பட்டுவந்த சூழலில், "விஜய் ஏன் பாஜகவில் சேர வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. அது வெறும் வதந்திதான். மக்கள் இயக்கம் பாஜகவுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை. அது ஒரு அரசியல் கட்சியாக சரியான நேரத்தில் மாற்றப்படும்" என நமது ஈடிவி பாரத்திற்கு தந்த சிறப்புப் பேட்டியில் எஸ்.ஏ.சி. அதற்கும் ஒரு எண்ட் கார்ட் போட்டார்.
வரும் 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் எஸ்.ஏ.சி.யின் பதில் விஜய் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
எஸ்.ஏ. சந்திரசேகர் இதனைக் கூறிய இரண்டு நாள்களுக்குள்ளாக சென்னை அருகே பனையூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், மக்கள் இயக்க நிர்வாகிகளை வரவழைத்து தீவிர ஆலோசனையில் விஜய் ஈடுபட்டிருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் அவர் ரஜினிகாந்தைப் போல முடிவை அறிவிக்காமல் காலத்தை கடத்துவாரா? அல்லது கமல்ஹாசனின் பாதையைப் பின்பற்றி அதிரடி களம் புகுவாரா? என்பதற்கான பதில் சில மாதங்களில் தெரியவரும்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (எம்ஐடிஎஸ்) கற்பிக்கும் டாக்டர் சி. லட்சுமணன் கூறுகையில், "அவர் களச் சூழலைப் பரிசோதிக்கிறார்.
இளையோர் பட்டாளமான தனது பரிவாரத்தை மக்கள் நலத்திட்ட உதவிகள், பணிகளின் வழியே மக்கள் இயக்கமாகத் தொண்டாற்ற வைத்திருக்கிறார். மக்களைச் சென்றடையும் பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகவும் புத்திசாலித்தனமானவர். அவர் தனது மகனின் அரசியல் லட்சியத்தை ஊடக வெளிச்சத்தில் வைக்க ஒருபோதும் தவறவில்லை. அரசியலில் குதிப்பதற்கு முன்பு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு மக்களிடையே உள்ள வரவேற்பை, வாய்ப்பை காண அவர் காத்திருக்கலாம்.
இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவார் என உறுதியாகச் சொல்வற்குரிய சாத்தியம் எதுவும் தென்படவில்லை. ஆனால், அவர் பின்னர் நிச்சயமாக அரசியலுக்கு வரக்கூடும்” என்று கூறுகிறார்.
எது எப்படியோ...
“234 தொகுதிகளும் சைலன்ட்டா இருக்கணும், 2021ஆம் ஆண்டில் நாங்கதான் இருக்கணும், மக்கள் பணி செய்யவரும் மாஸ்டர் தளபதி விஜய்” என அவரது ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிக்கான உண்மையான பொருள் விரைவில் வெளிப்படும் என்பது மட்டும் உறுதி.