தமிழ்நாடு

tamil nadu

'விஜய் தனது குடும்பப் பிரச்னையை வீட்டிற்குள் வைத்து சரி செய்துகொள்ள வேண்டும்'

By

Published : Nov 7, 2020, 5:49 PM IST

Updated : Nov 20, 2020, 4:23 PM IST

சென்னை: நடிகர் விஜய் அவரது குடும்பப் பிரச்னையை அவர் வீட்டிற்குள் வைத்து சரிசெய்து கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் இயக்குநர் வ.கவுதமன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தனது குடும்பப் பிரச்னையை வீட்டிற்குள் வைத்து சரிகொள்ள வேண்டும் - இயக்குநர் கவுதமன்
நடிகர் விஜய் தனது குடும்பப் பிரச்னையை வீட்டிற்குள் வைத்து சரிகொள்ள வேண்டும் - இயக்குநர் கவுதமன்

சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கரோனாவைக் கட்டுப்படுத்தத்தான் வேல் யாத்திரையை தடை செய்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் பாஜக தமிழ்நாட்டு தலைவர் எல். முருகன் கோயம்பேட்டிலிருந்து புறப்படும்போதே கைது செய்திருக்க வேண்டும்.

நாங்கள் பயணமோ, பேரணியோ மேற்கொண்டால் வழியிலேயே கைது செய்கிறீர்கள். சட்டத்தை மீறி ஆயிரக்கணக்கானவர்களுடன் சென்றவர்களைக் கைதுசெய்யாதது ஏன்? மீண்டும் வேல் யாத்திரை நடத்துவோம் என்று சொல்கின்றனர். அதைத் தடுக்க அரசு என்ன செய்யப் போகிறது.

வட இந்தியாவில் ராமரின் பெயரில் நடத்திய யாத்திரைகளின் மூலமாக கலவரத்தை நடத்தினார்கள். இப்போது தமிழர் கடவுள் முருகனின் பெயரில் தமிழ்நாட்டில் கலவரத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

வேல் யாத்திரைக்கு கரோனா காலத்தில் மட்டுமில்லாமல் வேறெந்த காலத்திலும் அனுமதி வழங்கக் கூடாது. தமிழில் மட்டும்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பாஜக கோரி உள்ளதா?

முருகன் ஆலயங்களில் குடமுழுக்கு நடக்கும்போது தமிழில் திருப்புகழ் பாடப்படுமா? ஜல்லிக்கட்டு கூட்டம் அடங்கிவிட்டதென நினைக்க வேண்டாம். தமிழர்கள் துள்ளிவந்த காளையையே அடக்கியவர்கள். தமிழர்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். அதை அழிக்க நினைத்தால் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

நடிகர் கமலஹாசன் தமிழ் திரைத் துறையில் மூத்த கலைஞர். அற்புத படைப்புகளை படைத்த அவரை வாழ்த்துகிறோம். அவரது அரசியலை பின்னால் இருந்து யார் இயக்குகிறார் எனத் தெரியும்.

நாங்கள் திரையில் ரசித்துக்கொண்டாடும் பிறவிக் கலைஞரான அவர் தரையில் எங்களை அழிக்கும் கூட்டத்துடன் வந்தால் அவரை எதிர்த்து தேர்தல் களத்தில் போராடுவோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டு காலமாக சிறை அடைக்கப்பட்டு, கொடுமையை அனுபவித்துவரும் நிரபராதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழரை உடனடியாக விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஆரம்பித்து உள்ளார். ஆனால், நடிகர் விஜய் அந்த கட்சி என்னுடைய சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். குடும்பப் பிரச்னையை குடும்பத்திற்குள் வைத்து கொண்டால் நன்றாக இருக்கும்" என அவர் கூறினார்.

Last Updated : Nov 20, 2020, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details