விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள காளையார்குறிச்சி அர்ஜூனா ஆறு உள்ளது. அந்த ஆற்றின் படுகையானது, பல ஆண்டுகளுக்கும் மேலாக நீர் இல்லாமல் முட்புதர்களாலும் மணல்களாலும் மூடிய நிலையில் காணப்பட்டது. அண்மையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, குறிப்பிட்ட ஓரிடத்தில் நான்கு புறம் வாசல் கொண்ட சுரங்கப் பாதை இருந்ததைக் கவனித்துள்ளனர்.
உடனடியாக, அவ்ஊர் பெரியவர்களிடம் இது குறித்து தெரிவித்து, அவர்களை அந்த இடத்திற்கு அழைத்து சென்று காண்பித்துள்ளனர். அந்த கோயிலில் பழனியில் இருப்பது போன்றே ஆண்டிகோலத்தில் முருகன் சிலை இருந்ததற்கான வடிவமைப்பு இருந்ததாக அறியமுடிகிறது. இதனையடுத்து, இது குறித்து வருவாய் துறையினர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு ஊர் இளைஞர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
கி.பி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரை கோயிலை ஆய்வு செய்யும் அலுவலர்கள்! அதன் பேரில் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை வல்லுனர் சாந்தலிங்கம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் மகாலிங்கம் ஆகியோர் இன்று (ஆக.25) வந்து ஆய்வு செய்தனர். ஆய்வு பணிகளை முடித்துவிட்டு பேசிய தொல்லியல் துறை வல்லுநர் சாந்தலிங்கம், "இந்த குடைவரை கோயில் கட்டுமானப் பணிகளை வைத்து பார்க்கும் போது, கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடைவரை கோயில் தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் வள்ளி குகைக்கு ஈடானது. ஆனால் இதன் பாறைகள் மிகவும் மோசமானது. இக்கோயில் தமிழ்நாட்டிலேயே மிக அபூர்வமான கட்டடக்கலை கொண்டது. இங்கு பழனி முருகன் ஆண்டிக் கோலத்தில் இருந்ததாக ஊர் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
இதன் அருகிலுள்ள கல் மண்டபத்தில் ஐம்பொன் சிலைகள், வெள்ளை பிள்ளையார் இருந்ததாகவும் கூறியுள்ளனர். ஆனால் தற்போது இங்கு எந்த சிலைகளும் இல்லை. இது குறித்து தொல்லியல் துறை இயக்குநருக்குத் தகவல் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் இந்த குடைவரை கோயிலை பாதுகாக்க வழி வகுக்கபடும்" என்றார்.