தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7.5% உள் இட ஒதுக்கீடு: அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குறித்த தகவலை கோரிய நீதிமன்றம்! - NEET Exam

சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர் ? என்பது குறித்த விவரத்தை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7.5% உள் இட ஒதுக்கீடு: அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குறித்த தகவலை கோரியுள்ள நீதிமன்றம்!
7.5% உள் இட ஒதுக்கீடு: அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குறித்த தகவலை கோரியுள்ள நீதிமன்றம்!

By

Published : Nov 9, 2020, 6:40 PM IST

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீட்டை வழங்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி ப்ரீத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஒன்றரை மாதத்திற்குப் பின்னர் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இதன் காரணமாக இந்த மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில், நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உள் இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு வழங்க வேண்டும். ஏனென்றால், அரசுப் பள்ளிகளில் பயில்வோரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வோம் ஒன்றே. அவர்களுக்குள் எந்த வேறுபாடுமில்லை.

அரசுப் பள்ளி இல்லாத பல இடங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள்தான் இருக்கின்றன. இங்கும் ஏராளமான ஏழை மாணவர்கள் படிக்கின்றனர்.

எனவே, அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதியுள்ள மாணவ - மாணவிகளுக்கும் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், கடந்த 3 ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு, அத்தகவலைத் தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பில் கால அவகாசம் வழங்க வேண்டுமென கோரப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் அது தொடர்பான விவரத்தை மனுதாரர் கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details