மதுரை உசிலம்பட்டி அருகே கண்டறியப்பட்டுள்ள பழங்கால இரும்பு உலைகள் குறித்த விரிவான தொல்லியல் ஆய்வு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் தீரன் திருமுருகன் என்பவர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டி, அதன் சுற்றுப் பகுதிகளில், கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு உலை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இதன் சுற்றுப் பகுதிகளில் இரும்பு பொருள்கள் காணப்படுவதால், இப்பகுதியில் பழங்காலத்தில் இரும்பு உருக்கும் உலை இருந்துள்ளதும் தெரியவருகிறது.
குறிப்பாக, இந்த ஊரின் மேற்கு மலையின் அடிவாரத்தில் முதுமக்கள் தாழிகள், கல்வட்டங்கள், குத்துக்கல் போன்றவையும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவை கீழடி நாகரிகத்திற்கும் முற்பட்டவையாக இருக்கலாம் என இவற்றைப் பார்வையிட்ட தொல்லியல் ஆர்வலர் தெரிவிக்கின்றனர்.
5ஆம் நூற்றாண்டில் நமது மன்னர்கள், பொதுமக்களில் இறந்தவர்களை இரும்பு உலைகளில் வைத்து அடக்கம் செய்யும் நடைமுறையும் இருந்துள்ளது.
இந்தப் பகுதியில் கிடைத்துவரும் அரிய பொருள்கள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நமது வைகை ஆற்று நாகரிகத்தையும், பண்டைய பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக உள்ளது. இவற்றை மத்திய தொல்லியல்துறை விரிவாக ஆய்வுசெய்தால் நமது தமிழர்களின் பண்டைய நாகரிகத்தையும், வாழ்வியல் முறையையும், வெளிக்கொணர முடியும்.
எனவே, உசிலம்பட்டி உலைப்பட்டி, சூலப்புரம், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான தொல்லியல் ஆய்வு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவானது, மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 3ஆம் தேதி ஒத்திவைத்தனர்.