கரோனா அச்சமின்றி பலர் தேவையில்லாமல் ஊரை சுற்றி திரிவதும், சிறிய தெருக்கள் வீதிகளில் இளைஞர்கள் சிறுவர்கள் கூட்டமாக அமர்ந்து விளையாடுவதும், ஆற்றங்கரையில் மீன் பிடிப்பதும், கிரிக்கெட் விளையாடுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
இவர்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் விதமாக தாராபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் கோயில் வீதி, அமராவதி ஆற்றுப் பாலம், பூக்கடை கார்னர், சின்னக்கடை வீதி, என். என். பேட்டை வீதி, பொள்ளாச்சி சாலை ஆகிய 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தாராபுரம் அமராவதி ஆற்றுப் பகுதிகளான ஈஸ்வரன் கோயில் பழைய ஆற்றுப்பாலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நீரின்றி வறண்டு கிடக்கும் அமராவதி ஆற்றுக்குள் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர். ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பதை அறிந்த அவர்கள் செய்வதறியாது தெறித்து ஓடினார்கள்.