தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிவாரணங்களை அறிவித்துவருகின்றது.
அந்தவரிசையில், தமிழ்நாடு அரசு நலவாரியத்தில் பதிவு செய்த முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, ரூ.2000 நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்தது. ஆனால், திருப்பூர் மாவட்ட நலவாரியத்தில் பதிவு செய்துள்ள மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், இதைக் கண்டித்து ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தங்களுக்கு அறிவித்த நிவாரணத் தொகையைக் காலதாமதமின்றி வழங்குமாறு கோஷங்களை எழுப்பி மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர். தொழிலாளர்களின் திடீர் முற்றுகைப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.