"மனிதி வெளியே வா, மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே, உயரம் உனதே தான் அமர்ந்தால் உயரம் தெரியாது" என்ற வரிகளுக்கேற்ப பெண்கள் தைரியமாக வெளியேவந்து, கல் உடைக்கும் வேலையிலிருந்து கணினித் துறை வரை அனைத்துத் துறைகளிலும் களமிறங்கி சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையில்லை.
இருப்பினும், ஸ்கூல் டீச்சர், டெய்லரிங், பியூட்டி பார்லர் என்பன போன்ற வேலைகள் பெண்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இங்கு எழுதப்பட்டுள்ளது. ஆனால், பெண்களும் இதுபோன்ற துறையை விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். கடினமான வேலைகளைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதில்லை. பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் உடல் உழைப்பை அதிகம் தரும் பணிகளில் ஈடுபட முடியாது என்ற காரணத்துடன் ஒரு பொதுவான கருத்து இங்கு நிலவிவருகிறது.
ஆனால் இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி, உடல் உழைப்பை அதிகளவில் கொடுத்து சில பெண்கள் சாதனை படைத்துவருகின்றனர். அந்த வகையில், அதிகடிப்படியான உடல் உழைப்பை ஏற்படுத்தும், உடலெங்கும் அழுக்கை ஏற்படுத்தும், ஏன் ஆண்களே செய்யத் தயங்கும் தொழிலான லேத் வேலை, லாரிகளுக்கு பஞ்சர் ஒட்டுவது, டிராக்டரில் உழவு செய்வது என்பன போன்ற தொழில்களைச் சிறப்பாகவும் திறமையாகவும் செய்துவருகிறார் சித்ரா.
மகளிர் தினமான இன்று சாதனை படைத்த பெண்கள் பலர் குறித்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஆண்களுக்கு நிகராக அசத்தும் இரும்பு பெண்மணி சித்ரா பற்றிய சிறு தொகுப்பு தான் இது.....
மதுரை மாவட்டத்தை சேர்ந்த சித்ரா விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனு, மகா, அர்ச்சனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். பெரிய அளவில் படிக்க வசதி, வாய்ப்பு இல்லாத காரணத்தால் காளீஸ்வரன் கடந்த 21 வருடங்களாக வாகனங்களுக்கு டயர் பஞ்சர் பார்க்கும் கடை வைத்து நடத்திவருகிறார். சொந்த ஊரான விருதுநகரில் தொழில் சரிவர அமையாததால் திருப்பூருக்கு புலம்பெயர்ந்தவர் அங்கும் தனது பஞ்சர் பார்க்கும் கடையை நிறுவியுள்ளார்.
ஆரம்ப காலத்தில் ஆட்களை வைத்து தொழில் நடத்த நினைத்த அவரால், குடும்பப் பணிச்சுமை காரணமாக அதனை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதன் காரணமாக பணியாட்களை நிறுத்திவிட்டு காளீஸ்வரன் மனனவி சித்ராவை உதவிக்கு கடையில் அமர்த்தியுள்ளார். கணவர் கடையில் இல்லாத நேர த்தில், அவ்வப்போது சின்னச் சின்ன வேலையான ஜாக்கி வைப்பது, டயரை உருட்டுவது என்று ஏதேனும் ஒன்றை செய்துகொண்டே இருந்துள்ளார். நாளடைவில் அவர் பஞ்சர் பார்ப்பதில் சிறந்து விளங்குமளவிற்கு தேர்ந்துள்ளார்.