திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகரில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டுவந்த நிலையில் தற்போது அதே பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் உரிய மனு அளிக்கும்படி கேட்டுகொண்டதன் பேரில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் கலைந்து சென்றனர்.
அம்மன் நகரைச் சுற்றியுள்ள காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அப்பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. தற்போது, புதிதாக இரவோடு இரவாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளால் அப்பகுதி பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சாலையோரம் நடந்து செல்லும்போது போதை ஆசாமிகள் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த புதிய டாஸ்மாக் கடை மக்கள் வசிக்கும் பகுதியில் திறந்திருப்பதால் மேலும் சிக்கலை ஏற்படுத்தும். கூலித்தொழிலாளியான எங்கள் வாழ்வில் இடியை தாக்கியுள்ளது என தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.
அதேபோன்று வாலிபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் டாஸ்மாக் அலுவலர்களுடன் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதாகக் கூறி, நவம்பர் 19ஆம் தேதியுடன் அந்த கடை அப்பகுதியில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மக்கள் இருப்பினும் கடை மூடப்படாமல் செயல்படுவதால், அக்கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மனு அளித்தனர்.
டாஸ்மாக் கடையால் ரொம்ப அவதிப்படுறோம் இதையும் படிங்க:ஓய்வெடுக்க சென்னை வருகிறாரா சோனியா?