பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான அனைத்து அடிப்படை வசதிகள் உருவாக்கப்படுகின்றன. இதற்காக இந்தியா முழுவதும் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பல்வேறு கட்ட தேர்வுகளில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை 2019 பிப்ரவரி 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் திட்டப்பணிகள், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை, தினசரி மற்றும் வார சந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தற்போதுவரை 125 பணிகள் நிறைவடைந்துள்ளன. 83 திட்டங்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளன. 21 திட்டங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் ஒரு பணிகூட திருப்பூரில் முடிக்கவில்லை. மதுரையை பொறுத்தவரை ஒரு பணி மட்டுமே முடிவடைந்துள்ளதாக தெரிகிறது. இதில் அதிகபட்சமாக கோவையில் 42 பணிகள் முடிந்துள்ளன. அடுத்தபடியாக சென்னையில் 21 பணிகள், சேலத்தில் 18 பணிகள், தூத்துக்குடியில் மூன்று பணிகள், நெல்லையில் ஆறு பணிகள், திருச்சியில் மூன்று பணிகள் முடிந்துள்ளன.