திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியின் வேட்பாளரும், மாநில பாஜக தலைவருமான எல். முருகன், சட்டப்பேரவை 2021-க்கான செயல் திட்டங்களை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நான் உழவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகச் சில ஊடகங்கள் கூறுகின்றன. மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி உழவர்களுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைத்துவருகிறார்.
வேளாண் விளைபொருள்களுக்கு உழவனே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரைச் சார்ந்தவர்கள் வேளாண் திருத்தச் சட்டங்களால் உழவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனப் பொய்ப் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
நான் வெளியூர்க்காரன் அல்ல; 44 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரமத்திவேலூர் ஊரை பூர்விகமாகக் கொண்டவன். தாராபுரம் பேருந்து நிலையம் அருகே வீடு எடுத்து இருந்துவருகிறேன். நான் வென்றாலும் தோற்றாலும் என்னுடைய மரணம் தாராபுரம் மண்ணில்தான் இருக்கும்.