தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்.. மருத்துவமனையில் குவியும் மக்கள்! - dengue Viral fever increasing

Virus fever: திருப்பூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் குவியும் மக்கள்
திருப்பூரில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 8:51 AM IST

திருப்பூரில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்

திருப்பூர்:தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் தங்கி பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பருவ மழை பெய்து வருவதால், குளிர் காற்று வீசுகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதில், பெரும்பாலானோர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வரக்கூடிய நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் செண்பகஸ்ரீ கூறுகையில், “திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாள்தோறும் சுமார் 70 பேர் காய்ச்சலுக்காக மட்டும் உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் வந்து செல்வது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக, புறநோயாளிகள் சுமார் 130 பேர் தினமும் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கத்தைக் காட்டிலும் 60 சதவீதத்திற்கு அதிகமான காய்ச்சல் நோயாளிகள் வருகின்றனர்.

தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை உட்பட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுழற்சி முறையில் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் பணியாற்றி வருகின்றனர்.

காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுபவர்களுக்காக சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரை 150 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். குறிப்பாக, வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இதன் மூலம் காய்ச்சலைத் தவிர்க்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தஞ்சாவூர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த ஊராட்சி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை... அதிமுகவினர் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details