திருப்பூரில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
தினமும் 1,000 பேருக்குக் கரோனா பரிசோதனை நடத்த இலக்கு - விஜய கார்த்திகேயன்
திருப்பூர்: தினந்தோறும் ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்," இதுவரை 78 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைவரும் கோயம்புத்தூர் மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் தங்கியிருந்தப் பகுதிகள் என அந்தந்த இடங்களில் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆயிரம் பேர் வரை தினந்தோறும் சோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றோம். திருப்பூரில், ஆயிரத்து 650 படுக்கைகளுடன் கரோனா வார்டு தயார் நிலையில் இருக்கிறது. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினருக்கு அவ்வப்போது பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம்" என்றார்.