தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி செயல்பட்ட ஆலை! போராடிய பொதுமக்கள் மீது தாக்குதல்

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே தடை விதிக்கப்பட்டிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் முறைகேடாக செயல்பட ஆரம்பித்ததால், போராடிய பொதுமக்கள் மீது எண்ணெய் நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

vellakovil

By

Published : Jun 21, 2019, 2:51 PM IST

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வேப்பம்பாளையம் என்ற கிராமத்தில் சிப்காட் வளாகமானது அமைந்துள்ளது. இந்த வளாகத்திற்குள் ரப்பர் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவை உள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரச்சான்றுக்கான தேதி முடிவடைந்தும் ஆலைகள் இயங்கிவருவதாகவும், முறைகேடான வகையில் நிலத்தடியை மாசு ஏற்படுத்துவதாகவும் கூறி கடந்த மாதம் இப்பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காங்கேயம் வட்டாட்சியர், தாராபுரம் சப் கலெக்டர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.

அந்தப் புகார் மனு அடிப்படையில் விசாரணை செய்த அலுவலர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட எழுத்துப்பூர்வமாக தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில், நிர்வாகத்தினர் இன்று காலை ஆலை செயல்பட தேவையான பொருட்களை லாரியின் மூலம் ஏற்றி வந்தபோது, கிராம மக்கள் லாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆலையின் உரிமையாளர் அருண், அவரது ஆட்கள் காரில் இருந்து இறங்கியதும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தாக்கியதாகவும், இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆலையின் உரிமையாளர் காரை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆலையின் உரிமையாளர் அருண் தாக்கியதில் காயமடைந்த தண்டபாணி என்பவர் தற்போது திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் காவல் துறையினர் இரு தரப்பிடம் இருந்து புகார் மனு வாங்கி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தடையை மீறி செயல்பட்ட ஆலை

ABOUT THE AUTHOR

...view details