தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய விஏஓ: முற்றுகையிட்ட மக்கள் - கொளத்துப் பாளையம் வி ஏ ஓ நவரத்தினம்

திருப்பூர்: இறப்புச் சான்றிதழ்கள் வழங்க லஞ்சமும் வாங்கிக் கொண்டு சான்றிதழ்கள் கொடுக்க அலைக்கழித்த கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் சுற்றி வளைத்து சுமார் 3 மணி நேரம் முற்றுகை செய்ததால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.

லஞ்சம் வாங்கி கொண்டு சான்றிதழ்கள் வழங்காத வி ஏ ஓ - 3 மணி நேரம் சுற்றி வளைத்த பொதுமக்கள்
லஞ்சம் வாங்கி கொண்டு சான்றிதழ்கள் வழங்காத வி ஏ ஓ - 3 மணி நேரம் சுற்றி வளைத்த பொதுமக்கள்

By

Published : Oct 7, 2020, 11:55 AM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொளத்துப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவரத்தினம். இவர் தாராபுரம் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட கோவிந்தாபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். அதனைத்தொடர்ந்து 26ஆம் தேதி இவரது உறவினர் சரஸ்வதி என்பவரும் உடல் நலக்குறைவால் காலமானார்.

இவர்களது இறப்புகளை பதிவு செய்த லட்சுமணனின் மகன் வெங்கடேஷ் குமார் இவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் வழங்க கேட்டு கோவிந்தாபுரம் கிராம நிர்வாக அலுவலர் நவரத்தினம் என்பவரை அணுகியபோது இரு நபர்களது இறப்பு சான்றிதழ்களையும் வழங்க 1700 ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் நவரத்தினம் கூடுதலாக தனக்கு பணம் தர வேண்டும் என்றும், இது தவிர தாராபுரம் தாசில்தார் வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கும் நீங்கள் நேரில் சென்று பார்க்கும் பொழுது கவனித்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் இறப்பு சான்றிதழ்களை வாங்க முடியும் என கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் குமார் இதுகுறித்து தனது உறவினர்களுக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் தகவல் கொடுத்ததையடுத்து ஏற்கனவே பொது மக்களின் பல்வேறு புகார்களுக்கு இலக்காகி இருந்த விஏஓ நவரத்தினத்தின் மீது கடும் கோபத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் கோவிந்தாபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.

பின்னர் நவரத்தினத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர், பதில் சொல்ல முடியாமல் திணறிய கிராம நிர்வாக அலுவலர், அலுவலகத்தை பூட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது பொதுமக்கள் அவரை அலுவலகத்தை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தினர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து கோவிந்தாபுரம் ஊராட்சி தலைவர் விக்ரம் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வருவாய் ஆய்வாளர் மாய ராஜா சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்கள் 3 மணி நேரத்திற்குப் பின் கலைந்து சென்றனர். இதனால் கோவிந்தாபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details