திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுப காரியங்களுக்கு அலங்கார மேடைகளை அமைத்துத் தரும் தொழிலைச் செய்பவர் ஹக்கீம். இந்த கரோனா ஊரடங்கில் கோயில்கள், திருமண மண்டபங்கள் ஆகியவை மூடப்பட்டுவிட்டன. இதனால், திருமணங்கள் எளிய முறையில் குறைந்த அளவிலான உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுவருகின்றன.
தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த வேண்டும் என்று எண்ணிய பெற்றோர்கள் சிலர், தங்கள் மன வேதனைகளை ஹக்கீமிடம் தெரிவித்துள்ளனர். மேலும் ஹக்கீமிடம் வரும் வாடிக்கையாளர்களும், ஆயிரங்காலத்துப் பயிர் என்று கூறப்படும் திருமணம் ஏனாதானோ என்று நடைபெறுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதை முக்கியப் பிரச்னையாகக் கருதிய ஹக்கீம் இதனைத் தீர்க்க புதுமுயற்சி ஒன்றைக் கையிலெடுத்துள்ளார். தனது லாரியில் மண மேடையை வடிவமைத்து, மணமக்கள் இல்லத்தருகே மண்டபம் போல் செட்டும் அமைத்துள்ளார். ஒரு பெரிய திருமண மண்டபத்தில் நடத்தப்பட்ட சுபகாரியம்போல் நடத்திடும் வகையில், தனது லாரியை வடிவமைத்திருக்கும் ஹக்கீமின் முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
லாரியில் வடிவமைக்கப்பட்டுள்ள மணமேடை கரோனா ஊரடங்கு காலத்தில் சுப காரியங்களை விமரிசையாக நடத்த முடியவில்லேயே என்று பொதுமக்கள் வருத்தத்தில் இருந்தநிலையில், உடுமலை மேடை அலங்கார கலைஞர் ஹக்கீமின் புதுமுயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க:அறுந்து கிடந்த மின் கம்பி... வாகன ஓட்டிகளை எச்சரித்த பெண்.. வீடியோ வைரல்!