தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி மறுப்புத் திருமணம்: உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு கடந்துவந்த பாதை! - Shankar's murder case

திருப்பூர்: உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில், சங்கர்-கௌசல்யா சாதி மறுப்புத் திருமணம் முதல் மூவர் விடுதலை வரை நிகழ்ந்தவை குறித்து ஒரு பார்வை.

udumalai-shankars-murder-case
udumalai-shankars-murder-case

By

Published : Jun 22, 2020, 12:24 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் சங்கர் (22) என்பவர் பழனியைச் சேர்ந்த கௌசல்யா (19) என்பவரை 2015ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். அதனால் கௌசல்யாவின் பெற்றோர் இருவருக்கும் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தனர்.

அதையடுத்து 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையத்தில் இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. அதில் சங்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயங்களுடன் கௌசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொலி இணையதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.

சங்கர் கொலையின் சிசிடிவி காட்சி

அதற்கு அடுத்த நாளே கௌசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்படி காவல் துறையினர் அக்கொலை தொடர்பாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, செல்வக்குமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மணிகண்டன், தன்ராஜ், பிரசன்னா ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.

அவர்களில் பிரசன்னா, மணிகண்டன் தவிர்த்து மற்ற ஒன்பது பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவுசெய்யப்பட்டது. அதனை ஏற்ற அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ஒன்பது பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஜூன் 15ஆம் தேதி உத்தரவிட்டார். எனினும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மேல்முறையீடு காரணமாக குண்டர் சட்டம் ரத்துசெய்யப்பட்டது.

அதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி, கொலை, கூட்டு சதி, பொது இடங்களில் கொடூரமாக தாக்குவது உள்ளிட்ட வன்கொடுமை சட்டங்களின்கீழ் வழக்கு பதியப்பட்டு 1500 பக்க குற்றப்பத்திரிகை திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. அந்த வழக்கை ஒன்றறை ஆண்டுகளாக நீதிபதி அலமேலு நடராஜன் விசாரித்துவந்தார்.

திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம்

அதையடுத்து அந்த வழக்கில் 2017 டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 1. தந்தை சின்னசாமி, 2. ஜெகதீசன் 3. மணிகண்டன், 4. மதன் (எ) மைக்கேல், 5. செல்வக்குமார், 6. ஸ்டீபன் தன்ராஜ், 7. கலை தமிழ்வாணன், 8. மணிகண்டன் ஆகிய 8 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை (தாய்மாமன்), பிரசன்னா (உறவினர்) ஆகியோர் விடுதலைசெய்யப்பட்டனர்.

  • குற்றவாளிகள் 8 பேரின் தண்டனை விவரங்கள் (2017 டிசம்பர் 12):
  1. சின்னசாமி (தூக்கு தண்டனை, 3 லட்ச ரூபாய் அபராதம்)
  2. மணிகண்டன், கூலிப்படை (தூக்கு தண்டனை, 1.65 லட்ச ரூபாய் அபராதம்)
  3. ஜெகதீசன், கூலிப்படை (தூக்கு தண்டனை, 1.65 லட்ச ரூபாய் அபராதம்)
  4. மதன், கூலிப்படை (தூக்கு தண்டனை, 1.65 லட்ச ரூபாய் அபராதம்)
  5. செல்வக்குமார், கூலிப்படை(தூக்கு தண்டனை, 1.65 லட்ச ரூபாய் அபராதம்)
  6. கலை தமிழ்வாணன் (தூக்கு தண்டனை, 1.65 லட்ச ரூபாய் அபராதம்)
  7. தன்ராஜ், கூலிப்படை (இரட்டை ஆயுள், 1.55 லட்ச ரூபாய் அபராதம்)
  8. மணிகண்டன், அடைக்கலம் கொடுத்தவர் (5 ஆண்டுகள் சிறை தண்டனை)

அந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார்.

மீதமுள்ள 5 பேருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதையடுத்து இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவருக்கும், ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டவருக்கும் தண்டனை ரத்துசெய்யப்பட்டது.

கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட மூவரின் விடுதலைக்கு எதிராகக் காவல் துறை தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்ததோடு அவர்களின் விடுதலையை உறுதிசெய்தது.

இதையும் படிங்க:உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கௌசல்யாவின் தந்தை விடுதலை

ABOUT THE AUTHOR

...view details