இந்த வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு திருப்பூர் மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விதித்த இரட்டைத் தூக்கு தண்டனை ரத்துசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டார்.
மேலும், ஐந்து பேருக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவருக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறை தண்டனையும் ரத்துசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
ஏற்கனவே தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட மூவருக்கு அளிக்கப்பட்ட விடுதலையை உறுதிசெய்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னதாக, இவர்களின் விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் 2016 மார்ச் மாதம் உடுமலை பேருந்து நிலையத்தில் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார்.
கொலை வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம் 2017 டிசம்பரில் சின்னசாமி உள்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.