திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மங்கலம் புறவழிச்சாலையில் சேலத்திலிருந்து கோவை நோக்கி தனியார் அவசர ஊர்தி சென்றுகொண்டிருந்தது. அப்போது கோவை-ஈரோட்டிற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று எதிரில் வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பைக் கடந்து தனியார் அவசர ஊர்தி மீது மோதியது.
அவிநாசி அருகே பயங்கர விபத்து: இருவர் மரணம்! - சாலை விபத்து இருவர் மரணம்
திருப்பூர்: அவிநாசி அருகே ஆம்புலன்ஸ் (அவசர ஊர்தி) மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
![அவிநாசி அருகே பயங்கர விபத்து: இருவர் மரணம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4879080-476-4879080-1572105834598.jpg)
இந்த விபத்தில் அவசர ஊர்தி பின்பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இந்த விபத்தில் அவசர ஊர்தி வாகன ஓட்டுநர், உதவியாளர் இருவரும் படுகாயமடைந்தனர். சரக்கு வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்து குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.