திருப்பூர்: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து திருப்பூர் குன்னாங்கால் பாளையத்தில் உள்ள அவரது உறவுக்காரர் சக்திவேல் என்பவருடன் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச.28) அம்மாவட்டத்தின் பல்லடம் சாலையிலுள்ள தெற்குபாளையம் பகுதியில் முருகன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், முருகனின் உறவுக்காரரான சக்திவேல், விசாரணையின்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த முருகன் சக்திவேலிடம் அவரது உறவுக்கார பெண்ணை தனக்கு மறுமணம் செய்து வைக்கக்கோரி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சக்திவேல் மறுப்பு தெரிவித்த நிலையில், அப்பெண்ணிடம் தவறாக நடந்துகொள்வேன் என முருகன் சவால் விடுத்துள்ளார்.