தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிக்டாக் மாற்று: சில் செய்ய உதவும் Chill 5! - Trippur youths launches Chill 5

திருப்பூர்: பாதுகாப்பு காரணங்களால், டிக்-டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக திருப்பூர் இளைஞர்கள் உருவாக்கியுள்ள CHILL 5 செயலியை பதிவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

CHILL 5
CHILL 5

By

Published : Jul 10, 2020, 6:26 PM IST

Updated : Jul 17, 2020, 3:49 PM IST

இந்திய - சீன ராணுவத்திற்கிடையே கடந்த மாதம் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக, எல்லையில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. பதற்றத்தை தனிக்க இரு நாட்டு ராணுவமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது.

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியர்களின் தனியுரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி டிக்-டாக், ஷேர்இர், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சகம் ஜூன் 20ஆம் தேதி தடை விதித்தது.

மத்திய அரசு விதித்துள்ள இந்தத் தடை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது என்னவோ டிக்-டாக் பட்டாளம்தான். "ரவுடி பேபி சூர்யா" முதல் "வணக்கமுங்கோ ஷீலா" வரை பலரும் தங்கள் ரசிகர்களுக்கு கலை சேவையை வழங்க முடியாமல் தவித்துவருகின்றனர்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து 'கலைத் துறை'யை காப்பாற்ற மித்ரான், சிக்காரி போன்ற இந்திய செயலிகளும் இன்ஸ்டாகிராம் ரீல் போன்ற சர்வதேச செயலிகளும் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், டிக்-டாக் செயலியைப் போல சிறு வீடியோக்களை உருவாக்க உதவும் புதிய செயலியை வடிவமைத்துள்ளனர் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள்.

CHILL 5 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி ஜூன் நான்காம் தேதி ப்ளே ஸ்டாரில் வெளியானது. ஆரம்ப காலத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பதிவிறக்கம் என்ற வீதத்தில் வளர்ந்துவந்த இந்த சில் 5 செயலியின் பதிவிறக்கம், டிக்-டாக் தடை காரணமாக பல மடங்கு அதிகரித்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் குழுவாக செயல்படும் இந்த பட்டதாரி இளைஞர்கள் இணைந்து கூலான இந்தச் CHILL 5 செயலியை உருவாக்கியுள்ளனர். இது குறித்து ஆப் டெவலப்பர்களில் ஒருவரான ஹரீஷ் குமார் கூறுகையில், "ஜனவரி மாதம் முதல் இந்த செயலியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

ஊரடங்கு காரணமாக பணிகள் சிறிது தாமதமானது. இறுதியில் ஜூன் 4ஆம் தேதி இந்தச் செயலியை ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்தோம். தொடக்கத்தில் எங்கள் செயலியை நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் என்ற வீதத்திலேயே பதிவிறக்கம் செய்துவந்தனர்.

ஆனால், டிக்-டாக் தடை காரணமாக எங்கள் செயலியின் பதிவிறக்கம் பல மடங்கு அதிகரித்தது. தற்போது வரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எங்கள் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

எங்கள் செயலியில் பயனாளர்கள் பதிவேற்றம் செய்யும் அனைத்து தரவுகளையும் நாங்கள் இந்தியாவிலேயே சேமிக்கிறோம்" என்றார்.

டிக்-டாக் செயலியில் சுமார் 12 கோடி இந்தியார்கள் ஆக்டிவாக இருந்ததனர். டிக்-டாக் செயலியில் தங்கள் திறமையை காட்டிக்கொள்ள பலரும் பயன்படுத்தினர் என்றாலும் இதில் அளவுகடந்த ஆபாச வீடியோக்கள் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒரு வீடியோவை எத்தனை பேர் பார்கிறார்களோ அதைப் பொறுத்து வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு காசு கிடைக்கும் என்பதால், டிக்-டாக் செயலியில் ஆபாசம் அளவு கடந்து இருந்தது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட டிக்-டாக் செயலி, இதுபோன்ற ஆபாச வீடியோக்களை நீக்க பெரிதாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது தான் டிக்-டாக் செயலி மீது பொதுமக்கள் வைக்கும் மிக முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது.

டிக்டாக் மாற்றாக சில் செய்ய உதவும் Chill 5

இந்நிலையில், CHILL 5 செயலியில் ஒரு குறிப்பிட்ட வீடியோ ஆபாசமாக உள்ளது என்று புகார் வந்தால் அது குறித்து விரைவில் ஆராய்ந்து அந்த குறிப்பிட்ட வீடியோவை தளத்தில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே இந்தச் செயலியின் சிறப்பு.

குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நாம் பதிவு செய்யும் நினைவுகளை அன்புடையவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் இந்தத் தளத்தில் ஆபாசங்களுக்கு துளியும் இடமில்லை என்று உறுதியளிக்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள்.

இந்தச் செயலியை, விரைவிலேயே அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெறும் ஒரு செயலியாக மாற்ற வேண்டும் என்பதே இந்த இளைஞர்களின் லட்சியமாக உள்ளது.

இதையும் படிங்க: டிக்டாக் தடை- ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் மித்ரான் பதிவிறக்கம்!

Last Updated : Jul 17, 2020, 3:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details