திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 66 ஆயிரத்து 417 பேரும், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 93 ஆயிரத்து 104 பேர், மூன்றாம் பாலினத்தவர் 283 என, மொத்தம் 23 லட்சத்து 59 ஆயிரத்து 804 பேர் உள்ளனர். இதில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 798 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 17,255 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என, மாவட்டம் முழுவதும் 16 லட்சத்து 44,085 பேர் வாக்களித்தனர்.
மாவட்டம் முழுவதும் 7 லட்சத்து 15 ஆயிரத்து 719 பேர் வாக்களிக்கவில்லை. சதவிகிதமாக பார்த்தால், ஆண் வாக்கு சதவீதம் 70.88. விழுக்காடு, பெண் வாக்கு சதவீதம் 68.49 விழுக்காடு, மூன்றாம் பாலினம் 11.30 விழுக்காடு மொத்தம் சாரசரி 69.67 விழுக்காடு ஆகும். எட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே.2) பல்லடம் சாலையிலுள்ள எல்.ஆர்.ஜி கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
எட்டு தொகுதிகளில் அவிநாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய ஐந்து தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம் ஆகிய தொகுதிகளை திமுக கைப்பற்றியது. அவிநாசி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட தனபால் ஒரு லட்சத்தி 16 ஆயிரத்து 674 வாக்குகளையும், ஆதித்தமிழர் பேரவை அதியமான் 65ஆயிரத்து 513 வாக்குகளையும் பெற்றனர்.
திருப்பூர் வடக்கில், அதிமுக சார்பில் விஜயகுமார் போட்டியிட்டு ஒரு லட்சத்து 12ஆயிரத்து 766 வாக்குகளையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ரவி என்கிற சுப்ரமணியன் 72 ஆயிரத்து 364 வாக்குகளையும் பெற்றனர். திருப்பூர் தெற்கில், திமுக சார்பில் போட்டியிட்ட செல்வராஜ் 74 ஆயிரத்து 757 வாக்குகளையும், அதிமுக சார்பில் போட்டியிட்ட குணசேகரன் 70 ஆயிரத்து 397 வாக்குகளையும் பெற்றனர்.