திருப்பூர் குளத்தூர் புதூர் பகுதியில் வசிப்பவர் மாரியம்மாள். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூர் வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி தனது மூன்று மகன்களையும் வளர்த்து வந்தார். இவரது மூத்த மகன் மணித்துறை, இரண்டாவது மகன் மணிகண்டன் இருவரும் பனியன் நிறுவனங்களிலேயே பணியாற்றி வந்த நிலையில், உடன் பணியாற்றியவர்களின் உதவியுடன் ரஞ்சித் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இவர் தாய்லாந்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகவும், மாத சம்பளம் ரூ. 40 ஆயிரம் எனவும் ஆசை வார்த்தைக் கூறியுள்ளார். இதனை நம்பிய மாரியம்மாள், தனது இரண்டு மகன்களையும் அனுப்புவதற்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து ரஞ்சித் இருவருக்கும் தாய்லாந்து செல்வதற்கான டிக்கெட், விசா எடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு சென்ற இருவருக்கும் ஓட்டலில் வேலை வாங்கித் தந்ததன் மூலம் இருவரையும் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், இருவரையும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியே வேலையில் சேர்த்து வைத்துள்ளார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததுடன் தங்களது தாய் மாரியம்மாளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்து ரஞ்சித்திடம் கேட்டதற்கு சரிவர பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தாய்லாந்தில் மாட்டிக்கொண்ட இளைஞர் இதனையடுத்து இளைய மகன் மணிகண்டன் தாய்லாந்தில் இருக்க பயந்ததையடுத்து மாரியம்மாள் ரூ. 58 ஆயிரம் செலவழித்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு அவரை வரவழைத்துள்ளார். மூத்த மகன் அங்கேயே இருந்த நிலையில் அவரது விசா காலம் முடிவடைந்ததால் அவரால் திரும்பி வர முடியாமல் தாய்லாந்திலேயே தங்கியுள்ளார்.
அவரை மீண்டும் வரவழைக்கத் தேவையான தொகையும் தன்னிடம் இல்லாத நிலையில் ரஞ்சித் மீது திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி தனது மகனை ஏமாற்றி அழைத்துச் சென்ற ரஞ்சித் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தனது மகனை மீட்டுத் தரக் கோரியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.
மகனை மீட்டுத் தர ஆட்சியரிடம் புகார்