திருப்பூர்:தமிழக அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் தொழிலாளர்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், டிசம்பர் 12ஆம் தேதி மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் சார்பில், மின் நிலைக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 8ஆம் கட்ட போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று (நவ.27) திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 170 சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், “மின் கட்டண உயர்வு குறித்து, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க 7 கட்ட போராட்டம் நடத்தியும் ஒரு சில கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். தொழில் நெருக்கடி காலத்தில், நிலைக் கட்டணம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தாங்கும் சக்தி தொழில்துறைக்கு இல்லை.