அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர் சந்திப்பு திருப்பூர்:திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம் அடுத்த தொட்டியம்பாளையத்தில் மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் அடங்கிய ஏழு வருவாய் மாவட்டங்கள் மற்றும் 14 திமுக மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது.
அக்கூட்டத்தில் திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். வருகிற 24ஆம் தேதி நடைபெற உள்ள இக்கூட்டத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, மேடை மற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் ஆகியோர் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இப்பயிற்சி பாசறை கூட்டத்தில் 14,411 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், "நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, ஜனநாயகத்தை வேரறுக்கும் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், அவற்றை எதிர்கொண்டு ஜனநாயகத்தை மீட்பதில் திமுக முனைப்போடு களம் கண்டு வருவதாக முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார்.
அந்த வகையில், நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட, அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் திமுக பொறுப்பாளரை நியமிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அவை திமுக தலைமையால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் திமுக தொண்டர்கள் சிறப்பாக செயலாற்றி முடித்துள்ளனர்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் என்பது தேர்தல் நாளன்று வாக்குகளைப் பெறுவதோடு முடிவடைந்து விடுவதில்லை. அரசுக்கும், கட்சிக்கும், வாக்காளர்களுக்கும் பாலமாகச் செயல்படும் பெரும் பொறுப்பு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடமே உள்ளது என பலமுறை திமுக தலைவர் கூறியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பும், கடமையும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையேச் சேரும். தேர்தலின் மாபெரும் வெற்றிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பங்கு அளப்பரியது. கட்சியின் வெற்றிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்தான் அடிப்படை என்பதை தலைவர் உணர்த்தியிருக்கிறார். அந்த வகையில் மேற்கு மண்டலத்திற்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக்கூட்டம் நடைபெறவுள்ளது" என கூறினார்.
இதையும் படிங்க: மியான்மர் நாட்டைச் சேர்ந்த மாணவி கடத்தல்? - மேற்கு வங்க போலீசார் தீவிர விசாரணை!