திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், தனது தாய், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு(செப்.3) மர்மநபர்கள் சிலர், மோகன்ராஜின் வீட்டின் அருகே விவசாய நிலத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மோகன்ராஜ், ஏன் வீட்டருகே அமர்ந்து மது குடிக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது மது குடித்தவர்களுக்கும் மோகன்ராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி சென்ற மர்மநபர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் மோகன்ராஜின் வீட்டிற்கு வந்துள்ளனர். மோகன்ராஜை வெளியே அழைத்து வந்து, மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் மர்மநபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகன்ராஜை சரமாரியமாக வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த, மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், சகோதரர் செந்தில்குமார் ஆகியோரையும் கொடூரமாக வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த கொடூர தாக்குதலில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், செந்தில்குமாரிடம் பணி புரிந்த ஓட்டுநர் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. வெங்கடேஷ் கோழிக்கடை வைத்திருந்த போது, மோகன்ராஜுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாகவும், இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கொலை நடந்ததாகவும் தெரிகிறது.