ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கொடிகாத்த குமரன் என்றழைக்கப்படும் திருப்பூர் குமரனின் 117ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அவர் வாழ்ந்த இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு தமிழ்நாடு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப்போராட்டத்தின்போது வெள்ளையர்கள் அடித்தபோது தன்னுயிரைக் கொடுத்து தேசியக் கொடியின் மரியாதையை காத்தவர்.
இந்திய நாட்டிற்காக உயிர்நீத்த திருப்பூர் குமரனின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்து கடந்த சில ஆண்டுகளாக அவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருப்பூர் குமரனின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அவர் வாழ்ந்த இல்லத்தில் பிறந்த நாள் விழா இன்று(அக்.4) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் குமரனின் உருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை தாங்க தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டபேரவை உறுப்பினர்கள் தனியரசு, கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின்போது திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றிடும் வகையிலும், நினைவு கூறிடும் வகையிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலைகளை அணிவித்தும், மலர்களைத் தூவியும் மரியாதையை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து குமரன் வீதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு: திமுக மகளிர் அணி பேரணி