தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூர் பனியன் மார்க்கெட் தீ விபத்து: இழப்பீடு வழங்க வணிகர்கள் கோரிக்கை - Tirupur fire accident news

திருப்பூர் பனியன் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் மார்க்கெட்டில் இருந்த 50 கடைகளும் தீயில் எரிந்து நாசமான நிலையில், விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிடும் பணி நடந்து வருகிறது.

Tirupur khaderpet banian market fire accident Fifty shops gutted crores of rupees worth goods destroyed
திருப்பூர் பனியன் மார்க்கெட்டில் தீ விபத்து

By

Published : Jun 24, 2023, 11:56 AM IST

திருப்பூர் பனியன் மார்க்கெட்டில் தீ விபத்து

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் மையப் பகுதியான ராயபுரத்தில் உள்ள காதர்பேட்டை பகுதியில் பனியன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடைத் துணிகள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு காதர்பேட்டை பஜார் என்னும் தகரச் சீட்டுகளுடன் கூடிய பனியன் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் 50 கடைகளுக்கு மேல் இருக்கும் நிலையில், வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களுக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும் இங்கு இருந்து பனியன் துணிகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

வழக்கம்போல கடைகள் அனைத்தும் 9 மணிக்குள்ளாக பூட்டப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் பனியன் பஜாரில் தீ எரிந்துள்ளது. இவ்வாறு தீ எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தீயை உடனடியாக அணைக்க முடியாத காரணத்தால் மாநகராட்சி தண்ணீர் வண்டிகள், தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட பின்னர் விபத்து ஏற்பட்டதன் காரணமாக நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. காதர்பேட்டை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புப் பணிகளை தீவிரப்படுத்தினர்.

சேதம் மதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின் இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பனியன் பஜாரின் மையப் பகுதியில் தீ பற்றிய நிலையில், இருபுறமும் மளமளவென தீ பரவியதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்து உள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட பஜாரை ஒட்டி கட்டடங்கள் அமைந்து இருந்தன. பஜாரில் பற்றி எரிந்த தீயால் அருகில் இருந்த கட்டடங்களுக்கும் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தால் நிலை குலைந்து இருப்பதாகவும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கான இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: குத்தாலம் அரசுப் பள்ளியில் ரூ.6,000 வசூல்.. வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details