திருப்பூர்: கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் ரயில் வழித்தடத்தில் வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வந்த மெமு(MEMU) ரயில் ஒன்றை ஓராண்டாக ரயில்வே நிர்வாகம் ரத்து செய்து இருப்பது பொதுமக்கள், தொழிலாளர்களை பெரும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது. இதே வழித்தடத்தில் மேலும் இரு ரயில்களின் நேரத்தை மாற்றியும், நின்று செல்லக்கூடிய ரயில் நிலையங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதன் மூலமாக பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு மாநகரங்கள் தொழில் வளர்ச்சி பெற்ற நகரங்களாக இருக்கின்றன. அதிலும் திருப்பூர் மாநகரத்தின் பனியன் தொழிலை நம்பி, சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளியூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பூருக்கு பக்கத்தில் உள்ள கோவை, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி திருப்பூருக்கு வந்து செல்லும் தொழிலாளர்கள் ஆவார்கள்.
இப்படி திருப்பூருக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வந்து செல்வதற்கு பேருந்து மற்றும் ரயில்களை பயன்படுத்துகின்றனர்.
மெமு ரயில் சேவை நிறுத்தம்:குறைந்த கட்டணத்தில் இருப்பதாலும், உடல் அசதி குறைவாக இருப்பதாலும், ரயில் பயணம் திருப்பூருக்கு வரும் பக்கத்து மாவட்டத்துக்காரர்களின் முக்கிய தேர்வாக இந்த ரயில் பயணம் இருக்கிறது. இப்படி திருப்பூர் நோக்கி வரக்கூடிய தொழிலாளர்கள், வந்து செல்வதற்கு மிகப்பெரிய போக்குவரத்து வசதியாக இருந்த பயணிகள் மெமு எக்ஸ்பிரஸ் ரயில் (MEMU train service) ஒன்றை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்து இருக்கிறது.
மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லக்கூடிய நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (Nagercoil Express -16610) மற்றும் திருச்சி - பாலக்காடு ரயில்களின் (Trichy Palakkad Train) நேரத்தை மாற்றி அமைத்து இருப்பதும் பயணிகளுக்கு பெரும் அலைச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பயணிகளின் பேராதரவு பெற்ற ரயிலாக இருந்த இந்த மெமு ரயிலானது, ரயில் எண் 06802 என்ற எண்ணில் கோவையில் இருந்து காலையில் 9.05 மணிக்கு கிளம்பி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மறு மார்க்கமாக 06803 என்ற எண்ணுடன் சேலத்தில் மதியம் 1.40 மணிக்கு சேலத்தில் கிளம்பி மாலை கோவையை மீண்டும் அடையும்.
22 ரயில் நிலையங்களில் சேவை:இந்த ரயில்தான் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சேலம் வரை உள்ள அனைத்து சின்னஞ்சிறு ரயில் நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்ற ரயிலாகும். இந்த ரயிலில்தான் கோவை ஜங்சன், கோவை வடக்கு, பீளமேடு, சிங்கநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம், ஈரோடு ஜங்சன், காவேரி, அனங்கூர், சங்கரி துர்க், மாவெலிபாளையம், மகுடஞ்சாவடி, வீரபாண்டி ரோடு, சேலம் ஜங்சன் என 22 ரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று கொண்டிருந்தது.
கேரளாவிற்கு மட்டும் ரயில் சேவை எதற்கு?:இந்த ரயில் மூலமாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டம் வரை தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பயனடைந்து வந்தனர். அதிலும் சீசன் டிக்கெட் மூலமாக குக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவு பயன்படுத்தி வந்த இந்த ரயிலை ஒரு ஆண்டாக தொடர்ச்சியாக ரத்து செய்து வைத்திருக்கிறது தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் (Salem Division of Southern Railway). அதே நேரம், இந்த ரயில் அதே அளவு பெட்டிகளுடன் கோவையில் இருந்து கேரளத்துக்கு மட்டும் இயங்குவதோடு, தமிழ்நாட்டில் ரத்து செய்து வைத்திருப்பதுதான் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களிடத்தில் கேள்வியையெழுப்பி இருக்கிறது.
அதாவது இந்த மெமு ரயிலானது, சேலத்தில் இருந்து கோவை வந்து சேர்ந்ததும், 06805 என்ற எண்ணில் கோவையில் இருந்து பாலக்காடு வரை பாசஞ்சர் ரயிலாக (Coimbatore To Palakkad) இயக்கப்பட்டு வந்தது. 06806 என்ற எண்ணில் பாலக்காட்டில் இருந்து கோவைக்கும் பின்னர், அங்கிருந்து கோவை - சேலத்துக்கு இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கோவை - சேலம் இடையே ஒரு ஆண்டாக ரத்து செய்யப்பட்ட இந்த ரயில், கேரள பயணிகளுக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கேரள பகுதிகளில் மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்களும் மற்றும் ரயில் பயணிகளும் புகார் கூறுகின்றனர்.
ரயில் சேவை ரத்துக்கு காரணமென்ன?:06802 மற்றும் 06803 என்ற எண்களில் இயங்கக்கூடிய இந்த ரயிலை ரத்து செய்ததற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிற ஒரே காரணம் என்னவென்று கேட்டால், 'தண்டவாள பராமரிப்பு பணி' என்பது மட்டுமே. கேரளத்தையும், தமிழ்நாட்டையும் இணைக்கக்கூடிய மேற்கு மண்டல ரயில்பாதையில் தண்டவாள பராமரிப்பு என்ற துக்கடா காரணத்தை கூறி, ஒவ்வொரு மாதமும் இந்த ரயிலை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்து அறிக்கையை அனுப்புகிறது. இப்படி ஒரு ஆண்டாக செய்யக்கூடியதற்கு பின்னணி காரணம்? என்று பொதுமக்கள் கூறும் காரணங்கள் தான் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.
ரயில் சேவை நின்றதற்கு பேருந்து உரிமையாளர்கள் காரணமா?: இந்த ரயில் தடத்தில் தினமும் பயணிகள் செல்லக்கூடிய 30-க்கும் மேற்பட்ட ரயில்களும், இது தவிர சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டாலும், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு கரோனா காலத்தில் இந்த மெமு ரயில் ரத்து செய்யப்பட்டபோது, வருமானம் குவிந்தது. எனவே, அவர்கள் இந்த ரயிலை தொடர்ச்சியாக ஓட விடக்கூடாது என்று முடிவு செய்து, இதற்காக, ரயில்வே அதிகாரிகளை சரிக்கட்டி இந்த ரயிலை ரத்து செய்ய வைப்பதாக திருப்பூரை சேர்ந்த பயணிகள் கூறுகின்றனர்.
அதேநேரம், இன்னும் சில பயணிகள் எழுப்பும் கேள்வி நியாயமாகத்தான் இருக்கிறது. கோவையிலிருந்து பாலக்காடு வரை இந்த மெமு ரயிலை இருமார்க்கத்திலும் இயக்கப்படுவதில் எந்த பிரச்னையும் இல்லை என்று ரயிலை இயக்குகிறார்கள். அதேபோல கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்திலும் பல்வேறு ரயில்கள் தடையின்றி இயக்கப்படுகிறது. ஆனால், ரயில் தண்டவாள பராமரிப்பு பணி என்று சொல்லி இந்த மெமு ரயிலை மட்டும் ரத்து செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.